Friday, December 18, 2015

மனம் விரிவடைதலும் அதன் சிதறதலும்

மனம் விரிவடைதலும் அதன் சிதறதலும்
நீங்கள் இதற்குப் பிறகு கீழே நான் எழுதியுள்ளதைப் படிக்கப்போவது முற்றிலும் மன எழுச்சி     
அடைந்தப் பொழுது எழுதப்பெற்றவை.
நீங்கள் இதை வாசிக்கும் காலம் அது உங்கள் காலமும் நான் மன எழுச்சியடைந்த காலமும் சரி நேர்க்கோட்டில் வருவதால் அதன் அருகில் செல்கிறீர்கள் என்று உணர்ந்த வண்ணமே வாசித்து முடியுங்கள்.
வாசிக்கும் போது நான் பல ஆண்டு காலம் பரீட்ச்சித்து பார்த்தது மற்றும் நான் செய்த தவறுகளுடனே செல்கிறீர்கள். நான் உணர்ந்தவற்றை நீங்கள் சில காலங்களுக்குப் பிறகு உணர்ந்துக்கொள்வீர்கள். நான் குறுக்கும் நெடுக்குமாக அலைந்தக்காலங்களின் மன எழுச்சி மற்றும் பிம்பங்களை நீங்களும் உணர்ந்த வண்ணமே செல்கிறீர்கள். காலங்கள் உங்களை அதைக் கடந்துப் போக செய்வதால் அதன் முழுமையை நீங்கள் உணர முடியாமல் போகின்றது. இருப்பற்ற நிலை சிறிது நிமிடங்களில் வருவதால் இவையே அதன் இருப்பு நிலை என்பதை பலரால் உணரமுடியவில்லை. நீங்கள் இதை படிப்பதால் நீங்கள் என் பல ஆண்டு கால உழைப்பை தங்களுடன் கொண்டு செல்கிறீர்கள் என்று உணருங்கள்.
இவ்வாண்டின் தொடக்கத்தில் நான் தமிழ்நாட்டில் காங்கேயத்தில் வேலை செய்ய சிவமலையில் தங்க நேர்ந்தது. விடுமுறை நாட்களில் வடை டீ சாப்பிடுவது ஊர் சுற்றி வரும் நேரங்களில் இளையராஜா பாடல்களை சுற்றும் ஊர்களில் கேட்பது தவிர்க்க முடியாத ஒன்றாக விட்டது. அவர் இசை சகல சாமனியர்களின் இசையாக நேரிடையாக சென்றடைந்திருக்கிறது என்பதை வெளியில் இருந்து வரும் என்னைப் போன்றோர் உணர்ந்து கொள்வது என்பது எளிது. அவருடைய எளிமையான இசை அன்றாட வாழ்வில் கலந்து விட்ட தங்களில் ஒருவராகவே பார்க்கபடுகிறது.
கர்நாடகத்தில் நான் வேலை செய்யும் காலங்களில் பல சிறு ஊர்களைக் கடந்திருக்கிறேன். ஆனால் எந்த உணர்வும் அவ்வூர்களில் எனக்கு ஏற்ப்பட்டதில்லை. ஆனால் தமிழகத்தில் காடுகளில் சுற்றித்திரியும் போது மிக தனிமையை உணர்ந்திருக்கிறேன். காரணம் வேலை செய்யும் போதும் சுற்றித் திரியும் போதும் மிக துாரத்தில் இளையராஜா பாடல்கள் கிராமங்களில் இருந்து கேட்டுக் கொண்ட படியேயிருக்கும். அது மனதை அசைத்துவிடும். மனம் உடனே இடம் பொருள் காலம் அதன் ஒத்திசைவுக்கு ஏற்ப ஒன்றிவிடும். தமிழக கிரமங்களில் அன்றாடம் ஏதேனும் விழா எடுப்பதன் பொருட்டு பாடல்கள் ஒலிப்பெருக்கிகளில் ஒலித்தவண்ணமே இருப்பதால் கேட்பரும் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். பண்பலை ரேடியோக்களில் இளையராஜா பாடல்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது,
வேலை நிமித்தமாய் தனிமையில் இருக்கும் தமிழர் ஒவ்வொருவரும் இளையராஜா பாடல்களையே கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். தங்கள் வாழ்வோடு அதன் பாடல்களை இணைத்துக்கொண்டும் தாங்கள் கடந்து வந்த காதலித்த நாட்களையும் கலங்கி அழுவதற்கும் பிரிவின் வேதனைகளையும் மெய்மறந்து ஆத்மாக்களை கரைத்து விடுகிறார்கள். எத்தனை தடவை அவர் பாடல்களைக் கேட்டாலும் தங்களை வேறு பரிமாணத்துக் கொண்டுச் செல்வதை உணர்ந்திருக்கிறார்கள்.
மனைவிக்கு பருத்தி உடைகள் வாங்க ஈரோடு சென்று திரும்பி காங்கேயம் வருவதற்கு தனியார் பேருந்தில் வர நேர்ந்தது. பேருந்தில் இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரு புறம் இடதும் மறு புறம் வல பக்கமும் வைக்கப்பட்டிருந்தன. ஒலிப்பெருக்கிகள் நிரம்பியிருந்தன. நான் நடுவில் இறங்குவதால் நடத்துனர் என்னைக் கடைசியில் ஏறுமாறுச் சொன்னார். வெளியில் நின்றுக் கொண்டே நான் டிவியைப் பார்த்துகெ்கொண்டிருந்தேன். இளையராஜாவின் காதல் டூயட் பாடல்கள் டிவியில் சென்றுக்கொண்டிருந்தது. நான் இப்படி பார்ப்பதைப் பார்த்த ஓட்டுனர் நீங்கள் உட்கார்ந்துக்கொள்ளுங்கள் என்றார். என் பின்னர் எல்லோரும் உள்ளே வந்துவிட்டனர். பேருந்து கிளம்பி  நிறுத்ததில் இருந்து வெளிவந்து விட்டிருந்தது.
என்னைத்தவிர யாரும் டிவியைப் பார்க்கவில்லை. எல்லோரும் பாடல்களை மிக கவனமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரம் ஏழு ஆகியிருந்தது, வேலை முடிந்து வீட்டிற்குச் செல்பவர்கள் ஒவ்வொருவராக வழியில் ஏறிக்கொண்டிருந்தார்கள். ஏறும் போது ஹியர் போன் உடன் ஏறுபவர் உள்ளே வந்த வுடன் அதை கழட்டிவிட்டு பாடல்களைக் கேட்க ஆரம்பிக்கின்றனர். பேருந்து நிரம்பியிருந்தது. படிவரை மக்கள் பயணம் செய்துக்கொண்டிருந்தார்கள். டிவி ஓடிக்கொண்டிருக்கிறது பாடல்கள் கேட்டவண்ணமேயிருக்கின்றன. ஆனால் பாடல் ஓசை தவிர பேருந்தில் ஓசையற்று இருந்தது. நடத்துனர் அடிக்கடிஆள் இறக்கம். ஆள் ஏற்றம்இவ்விரண்டு வார்த்தையும் விசில் சத்தமும் தவிர மற்ற ஓசையேயின்றி பேருந்துச் சென்றுக்கொண்டிருந்தது. மக்கள் தங்களை மறந்து பயணம் செய்துக்கொண்டிருந்தனர்.
படத்தில் நாயகன் நாயகி கட்டி உருள்வது பற்றி யாரும் கவலைப்படுவதாக தெரிவதில்லை. எல்லாரும் இசையைக் கேட்ட வண்ணமேயிருந்தனர்.
எல்லோர் மனம் ஒரே சமயத்தில் விரிவடைவதும் சிதறுவதாகவும் இருந்தது. இசையின் நடுவே ஓடிக்கொண்டிருக்கும் கிடார் இசை கூறுகள் அதன் பேஸ் சுரத்தின் ஓசை எல்லோர் மனங்களையும் மயக்குமற செய்கின்றன. மனங்கள் அத்தனையும் கிடார் நரம்புகளிலிருந்து எழும்பும் ஓசையின் பின்னே சென்றவண்ணமிருக்கின்றன. திடீரென்று புல்லாங்குழல் ஓசை நம்மை திசைதிருப்புகின்றன. பேஸ் கிடார் இசை கூறுகள் அதன் போக்கில் தனியாக பாடிய வண்ணமிருந்தன. சட்டென்று நம்மை கடத்திச் செல்லும் ஓசைகள் இசையின் நடுவே எழுவதும் மறைவதுமாகவேயிருந்தது.
யாருடைய மனமும் ஆன்மாக்களும் பேருந்தை விட்டு வெளியே செல்லவில்லை. என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் அன்று ஒரு தெளிவிக்கு வந்தது. ஆன்மாக்கள் எங்கே விரிவடைகிறதோ அதை ஒட்டியே பயணிக்கின்றன. வெளியில் செல்வதில்லை.
எல்லையில்லா மனத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து செல்லும் அந்த இசை மற்ற இசையால் மனத்திற்கப்பால் செல்ல முடியவில்லை. இளையராஜாவின் சில காதல் பாடல்கள் மனத்தின் ஒளி வேகத்தில் பயணிக்கின்றன. கேட்பவரால் அதை எளிதாக உணர்ந்துக்கொள்ளவும் அதன் ஊடே பயணம் செய்யவும் மனம் அந்த அளவுக்கோலில் இல்லாமல் சட்டேன்று பாய்ந்து விரிவடைந்தும் விடுகிறது.
நினைப்புக்கு எட்டாத மாபெரும் மனத்தின் ஆளுமையை தளர்த்தி தன் இசை கோர்வையால் மிக எளிமையாக பயணிக்கச்செய்ய இளையராஜாவின் இசையால் மட்டுமே முடிகிறது.
வேலை நிமித்தமாய் தனியாயிருக்கும் தமிழர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த இசை கோர்வைக்குள் பயணித்து தன் ஊருக்குச் சென்றுவிடுகிறார்கள். கண்கள் பனித்துவிடுகின்றன.
மனத்தில் எழும் இசைக் கோர்வைகளை காகிதத்தில் வரைந்து அதை மீண்டும் ஒலிகளாக உருவெடுத்து உணர்த்துவது என்பது அம்மனமே மீண்டும் காகித்திலிருந்து ஒலிகளாக சென்றடைவதை குறிக்கிறது.
கேட்பதாகவும்   கேட்பது பாடலில் காண்பதாகவும் மாறி மாறி அவ்விசையை கேட்பவனுக்கு மிக புதியதான அனுபவம் கிடைக்கிறது. தவம் முடித்தவுடன் வரும் அமைதிப்போல் தங்களை அறியாமல் இசையில் மனத்தை உணர்ந்த வண்ணமே செல்கிறார்கள் மக்கள்.
சில பாடல்கள் முதன்முதலில் கேட்டு அனுபிவிக்கும் போது ஏற்படும் பரவசம் சாதாரணமாக யாரையும் விடுவதில்லை. நான் கடவுள் படத்திலும் நீதான் பொன்வசந்தம் படத்தின் இசையில் அது புதிய ஒலி கேட்டது. அந்த குறிப்பிட்ட இசை கோர்வையில் கம்பிகளிலும் நரம்புகளிலும் எழுந்த அந்த ஓசையின் உக்கிரமும் ஆளுமையும் தன்னை தக்கவைத்துக் கொள்கிறது. கிடார் இசைகள் மிக நுண்மையாக நம்மை அதிர வைத்து விடுகிறது. கிடார் பேஸ் மாஸ்டர் சசிதரன் மற்றும் சதா மாஸ்டர் இவ்விருவரும் பங்களிப்பும் இளையராஜாவின் அத்தனை பாடல்களைிலும் தங்களை மறந்து மகா பேரொலியை நமக்குக் கொடுத்தவர்கள்இவர்களின் கிடார் இசையில் பிரபஞ்சத்தை தொட்ட அதன் எல்லையை கடந்த பாடல்தென்றல் வந்து தீண்டும் போதுஇசை பிரபஞ்சத்தின் எல்லைகளை உடைத்து விடுகின்றன. அவர்களுடன் புல்லாங்குழலில் மாஸ்டர் சுதாகர் மற்றும் நெப்போலியன் அருண்மொழி.
இசையைக் கேட்கும் ஒருவருக்கு ஒலி சுரங்கள் மனம் வழியாக பிரபஞ்சத்துடன் இணைப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. மனம் மிக மிக நுண்ணிய ஒலி இழையுடன் அண்ட சராசரங்களை கட்டியாளும் உணர்வுக்கு எட்டிவிடுகிறதுமனம் இங்கே காட்சியாக விரிவடைந்து நம் பள்ளி கல்லுாரி நாட்கள் முழுக்க காட்சிகளாக சிதறுகின்றன. அங்கே எழும்பி வரும் ஓசைகள் மக்களை எளிமையாக பரவசபடுத்திவிடும். இளையராஜாவின் இசையைக் கேட்க நமக்கு தனியாக வகுப்புக்கு சென்று பயில வேண்டியதில்லை. மனம் வெற்று இருப்பின் எல்லையில்லா இன்பத்தை அளித்துவிடும்.
என்னுடன் பணிபுரியும் நண்பருடைய தந்தை இசை மேதை டி.கே.ராமசாமி அவர்கள். இசை உலகில் மிக பிரபலம் அவர்சங்கீதத்தை முறைப்படி கற்றவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் ஏராளம். காஞ்சி மடத்தின் ஆஸ்தான இசை இசைக்கும்  ஒருவர். அவர் மகன்கள் இருவரும் திரு ஐயப்பன் மற்றும் மீனாட்சி சுந்தரம் அவர்கள் இன்றும் வெளிநாடுகளில் இசை கச்சேரியும் மற்றும் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றனர். நான் பலமுறை என் நண்பனிடம் இளையராஜாவின் இசையைப் பற்றி கேட்டிருக்கிறேன் விவாதித்தும் இருக்கிறோம். அவர் அதற்கு ஏற்றுக்கொள்ள மாட்டார். நான் அவரிடம் ஒரு முறை உன் சகோதரரை பெங்களுர் கச்சேரிக்கு வரும் நாளில் என் வீட்டில் இரண்டு நிமிடம் இசைக்குமாறு கேட்டேன் . அவர் மறுத்து விட்டார் . சங்கீத ஞானமில்லாதவர் வீட்டில் இசைப்பதில்லை என்றார். அவர் இசைத்திருந்தால் அந்த வீச்சு எந்த அளவிற்கு விரிவடைந்தது என்பதை இங்கே எழுதியிருப்பேன். இசைக்கோர்வைகளை நான் முறைப்படி படித்திருந்தால் இன்னும் விரிவாக எழுதலாம்.
இங்கே இசை ஒரு அளவுக்கோலில் பயணிக்கிறது. ஆனால் இளையராஜாவின் இசை கட்டுபாடில்லாமல் இயங்கும் மனத்தை கட்டியிழுத்து பிரபஞ்சத்துடன் முதல் முப்பது நொடிகளில் இணைத்தப்பிறகே பயணம் ஆரம்பிக்கிறது. இந்த வேறுபாடு களையாது. களைந்தால் மனம் நிற்காது. தமிழர்கள் இந்த தேவ இசையை இலவசமாக கேட்பதற்கு மிகவும் கொடுத்துவைத்தவர்கள்.




2 comments:

YOGI Brahmasri said...

ஆத்மநமஸ்காரம் ஐயா....அருமையாக இருக்கிறது.நன்றி.....

Vethathiri Maharishi - Anuradha Selvakumar said...

வாழ்க வளமுடன்🙂🙏